Wednesday, September 18, 2013

கொங்க வெள்ளாளர் - குழாயர் கூட்டம்

குழாயர் கோத்திரத்தின் முதல் காணி கோவிலூர். கோவிலூர் குளித்தலை வட்டத்தை சார்ந்தது.
சேர அரசனுக்கு வேடர்கள், வேட்டுவர்கள் பல துன்பங்களை செய்தனர்.
கோவிலூர் குழாயர் கூட்டத்து குமாரத்தினமால் வேட்டுவர்களை வென்று இலவந்தி (வேளராசி எலவந்தி) கோட்டையை பிடித்தான்.

சேர மன்னன் இந்த வெற்றியை விழாவாக நடத்தினான்.
  
குழாயர் கூட்டத்தினர் தேவ மன்றாடி பட்டம் பெற்றார்கள்.

மன்றாடி பட்டம் என்றால் போரில் வெற்றி பெற்ற வீரமிக்கவருக்கும், மன்றத்தில் வாதாடி வென்றவரையும் குறிக்கும்.

இன்று வரை  இந்த ஐந்து கூட்டத்திற்குள் தான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வரும் பழக்கத்தினை பெரும்பாலும் கடை பிடித்து வருகிறார்கள்.

குழாயர் கூட்டதை, குழையர் என்றும் சில புலவர்கள்  குறிப்பட்டு இருக்கின்றனர்.

காம்பிலி அம்மன் துதி:

முன்னர் முளைத்த முதுகுடிமக்கள் குழாயரினம் 
நன்னர் குலத்தின் நலம் விழை நாயகி நாமகளே ! 
இன்னல் களைந்தே இனியநல் வாழ்வை இணைத்தருள்வாய் 
கன்னல் மொழியாய்க் கருத்துடைக் காம்பிலித் தாயவளே !!!கொற்றனூர் காணிப்பாடல் :

"காவல் குழாயன் கதித்த பெரியகுலன்
ஆவல்சேர் ஆந்தை அதிரேசன் - மேவியசீர்
செம்பூத்தன் செட்டியுடன் தென்கொற்றை மாநகர்க்கு
இன்புற்ற எழ்முதன்மை யே "

"ஞாயம் நிலைபெருக்கும் நற்கா வலன்குழையன்
நேயப் பெரியகுலன் நீள்ஆந்தை - ஆயன்
திருவளர் கொற்றைக்குச் சேரன்செம் பூதன்
பெருகுசெட்டி யும்காணிப் பேர் ".

பெரிய கூட்டத்து பட்டக்காரர் வேனாடுடையாரின் ஊராகிய கொற்றையூரில் (சங்கரண்டாம் பாளையம்) முதல் காணியாளர் குழாயர் கூட்டத்தினரே.
குழாயர் கூட்டம், பெரிய கூட்டம், ஆந்தை கூட்டம், சேரன் கூட்டம், செம்பூத்தன் கூட்டத்தினர் ஆகியோர் கொற்றனூரின் காணியளர்கள்..
இவர்கள் தவிர, காவலர் ஆகிய வேட்டுவரும், கொங்கு செட்டியாரும் கொற்றனூரின் காணியாளர்களே.

பெரிய கூட்டத்து வேணாடுடையார் கொற்றனூர் தலைவராக வரும் முன் குழாயர் கூட்டத்தினரின் நிர்வாகமே நடைபெற்றது. மூவேந்தர் வருகையின்போது அமரவதியாற்று வெள்ளபெருக்கால் குழாயர் கூட்ட கொற்றனூர் தலைவர்கள் தேவண்ண கவுண்டரும், அவர் தம்பி கருப்பண்ண கவுண்டரும் நாடுகண் மேட்டுக்குத் திட்டிக் கிடாய் கொண்டு வரத் தாமதம் ஆனதால் வேணாடுடையார் தன் மகனைப் பலி கொடுத்தார் என்றும், அதனால் மிகிழ்ந்த மூவேந்தர்கள் கொற்றனூர் காணியையும், தென்கரை நாட்டு ஆட்சியையும் வேணாடர்க்கு அளித்தனர் என்று வரலாறு ஒன்று கூறப்படுகிறது. அதனால் காணியுரிமை பெற்ற பெரிய கூட்டத்து வேணாடுயார்க்குக் கீழ் பணி புரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு கீழ் பணி புரிய விருப்பமில்லாமல், கொற்றனூர் குழாயர் அருகில் உள்ள கொத்தனூர் என்னும் காட்டுபகுதியில் ஊர் அமைத்து, கோயிலும் ஏற்படுத்தினர்.

வேணாடுடயாரை பாட்டுடைத் தலைவராக கொண்ட இரத்தின மூர்த்தி விறலி விடு தூதில்,

"வேண்டுபுகழ்க்
கோமான் குழாய குலத்தில் மிகஉதித்த
சீமான் பெரியண்ண தீட்சணன் "

என்று குழாயர் கூட்ட தலைவரை குறிப்பிடபடுகிறது.குழாயர் கூட்டத்து காணி பாடல்:


வளமிலகு நாகமலை சென்னிமலை கொல்லிமலை
  வானிலகு ஆனைமலைசேர்
மாசிலா அலகுமலை பன்றிமலை பொன்னூதி
   மலைசெம்பொன் மலைகுடகுடன்

தளமிலகு காஞ்சிமா நதிவானி நள்ளாறு
   தாழ்வில்ஆன் பொருனைலவணம்
தாங்குநதி காவேரி ஆழியாறு உடன்பல
   தருமதென் கரைநாடுகாண்

புளகண்ணை அவிநாசி வைகாவூர் நாடுகீழ்ப்
    பூந்தறை மேல்பூந்தறை
புகழ்கோயி லூர் விளங்கில் கண்டியன் கோயில்நிழலி
    பொற்பமரும் கலியாணியூர்
களபமுள ஆனையூர் குழாநிலை குயபள்ளி
    கருமாபுரம் புத்தரசை
கவசைநிரை யூர் கொற்றை மேவிய குழாயரைக்
    காத்திடும் பெரியம்மனே !" 

வேளராசி  என்பது பொன் குலிக்கி(பொன்குலிக்கி) நாட்டில் உள்ள வேளராசி வடமலைபாளையம், வேளராசி கள்ளிபாளையம், வேளராசி எலவந்தி, வேளராசி வாவிபாளையம் கிராமங்களை உள்ளடக்கிய சமஸ்தானம்.

வேளராசி சமஸ்தானம்  தான், புத்தரச்சல் காணி.

தற்போது, எலவந்தி மற்றும் வாவிபாளையம் கிராமங்களில் பெயருக்கு முன்னால் உள்ள வேளராசியை தமிழக அரசு பதிவேட்டில் இருந்து நீக்கிவிட்டது.
மற்றும், வேளராசி வடமலைபாளையம், வேளராசி கள்ளிபாளையம் கிராமங்களிலும், வேளராசி என்ற அடையாளத்தை அளிக்கும் சதியை தமிழக அரசு சத்தமில்லாமல் செய்து வருகின்றன. 


குழாயர் கூட்டத்தினரின், தொன்மையான வேளராசி என்ற அடையாளத்தை ஒருபோதும் விட்டு கொடுக்க கூடாது.
  
கல்வெட்டு 

"ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் சிரீவிக்கிரம சோழ 
தேவர்க்கு யாண்டு இருபதாவது சோழமாதேவி நல்லூரில் வெள்ளாளன் குழாயரில் அதிசிய சோழன் அரைசன் ஆன மணிகைராயனுக்கு நன்றாகத் திருமண மண்டபத்தில் திருநிலை கால் இரண்டும் படியும் நாட்டு விச்சேன் மணிகைராயனேன் பன்மாகேசுவரர் இரட்சை"


- தொடரும்